top of page

உலகத்தை அறிந்தேன்



மீனவர்கள் வாழும் குப்பத்தில் நானும் என் குடும்பமும் குடியிருந்தோம். என் குழந்தைகள் என்னுடன் மீன் பிடிக்க சில நேரங்களில் வருவார்கள். கடலில் செல்லும் வேளையில் காணும் நீர் வாழ் பிராணிகள் பல நிறத்தில் செல்வதை குழந்தைகள் ரசித்துக் கொண்டு என்னுடன் வருவது என் கடுமையான உழைப்பை மறக்க செய்யும். சில நேரத்தில் அந்த குழந்தைகளின் கேள்விகள் என்னை சிந்திக்க வைக்கும். என்ன பதில் கூறுவது என அறியாமல் தடுமாறிய நேரங்களில் வண்ணத்தில் ஓடும் மீன்கள் அவர்களின் கவனத்தை திசை திருப்பி விடும். என் இளைய மகன் என்னிடம் உலக வாழ்க்கை என்றால் என்ன என்று கேட்க முதலில் நான் நினைத்தது பிறந்து பெரியவனாகி திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை நடத்தி குழந்தை பிறப்பதையும் அவர்கள் வளரும் வேளையில் செலவுக்கு தகுந்தவாறு வரவை கொண்டுவர படும் துன்பங்கள் கடுமையான உழைப்பு அதனால் வரும் சிறுசிறு வீட்டுச் சண்டைகள் குறைபாடுகள் எனப் பல எண்ணங்கள் என் மனதில் தோன்றிட இவனுக்கு இதை எவ்வாறு புரிய வைப்பது சொன்னாலும் அவனுக்கு அது பிடிக்குமா இதை கேட்ட பிறகு எங்களை வெறுத்து அவன் வீட்டைவிட்டு வெளியே சென்று விடுவானா என்ற எதிர்மறை எண்ணங்கள் மனதில் வர நான் அவனிடம் நீயே வளர்ந்து பெரியவனாகும் பொழுது அறிந்து கொள்வாய் என ஒரே வார்த்தையில் அந்த கேள்விக்கு பதிலாக நான் அவனிடம் கூறினேன்.


மாதங்கள் உருண்டோடின இரு பிள்ளைகளும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தனர். இதனால் வீட்டில் செலவு அதிகமாகியது. வரவை அதிகரிக்க நான் கடலுக்கு காலை சென்று இரவில் நேரம் கழித்து வர ஆரம்பித்தேன். பிள்ளைகள் நான் வரும் நேரத்தில் உறங்க சென்றிருப்பார்கள்.

வார கடைசியில் விடுமுறை நாள் என்பது எனக்குக் கிடையாது. எல்லா நாட்களும் நான் வேலைக்கு செல்ல வேண்டும். ஆகவே பள்ளி விடுமுறை நாட்களில் என் குழந்தைகள் கடல் அல்லது கடல் தண்ணீரால் உருவான ஓடைகளும் குளங்களும் அதை சுற்றி வளர்ந்துள்ள செடிகளும் மரங்களும் உள்ள இடங்களுக்கு சென்று தங்கள் நேரத்தை கழித்து விட்டு வீடு திரும்புவார்கள். இரவு உணவின் பொழுது அவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். அப்படி ஒரு நாள் என் மகன் பெற்ற அனுபவம் அவனுக்கு உலக வாழ்க்கையைப் பற்றி பாடம் புகட்டியது. அன்று நான் மீன் பிடிக்க கடலில் செல்ல, என் மகன் பக்கத்தில் உள்ள ஆறில் தன் நேரத்தை கழிக்க சென்ற பொழுது நடந்தவைகள் எவ்வாறு அவனுக்கு உலக அறிவை புகத்தியது என்பதை காண்போம்.


என் மகன் அன்று ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறான்.

அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் சிறு முதலை ஒன்று அவனைப் பார்த்துப் பரிதாபமாகக் கதறியது. அதைப் பார்த்து அவன் ’மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்’ என மறுத்து விட்டான். ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி, என் மகன் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது.


”பாவி முதலையே இது நியாயமா? என்று என் மகன் அதனிடம் கண்ணீருடன் கேட்க, “அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு அவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. என் மகனுக்கு தான் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றிகெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.


அப்பொழுது அவன் மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். இதுதான் உலகமா?. அதற்கு பறவைகள், ”எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளைக் குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்” என்று ஆமோதிக்கின்றன.


அங்கு மேய்ந்து கொண்டு இருந்த கழுதைகளைப் பார்த்து என் மகன் இதைப் பற்றி கேட்க அவைகள் . ”நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகபடியான சுமைகளைச் சுமக்க வைத்து எங்களை அடித்து, சக்கையாக வேலை வாங்குகினார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், உங்களால எங்களுக்கு ஒரு பயனும் இல்லை இனி தீனி போட முடியாது என்று விரட்டிவிடுகிறார்கள். எங்களுக்கு முதலை சொல்வது ஒரு விதத்தில் சரிதான்” என்று தோன்றுகிறது என முடித்து வாயை மூடிக்கொண்டது.


பின் என் மகன் ஆடுகளை கேட்கிறான். ”எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே, நாங்கள் நன்றாக வளர்ந்தவுடன் எங்களை இரையாக்கி கொள்வதால், முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன.


கடைசியாக அங்கு நின்ற முயலைப் பார்த்துக் கேட்க. “ உலகம். இது வல்ல முதலை ஏதோ பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது. ‘ குட்டி முயல் உனக்கு என்ன தெரியும்?’ என்று முதலை கோபமாகச் சொல்லவும், ’நீ பேசுவது சரியாக கேட்கவில்லை புரியவில்லை, கொஞ்சம் தெளிவாகப் பேசு’ என்கிறது அந்த முயல்.


இந்த பையனின் காலை விட்டு விட்டால் இவன் ஓடிவிடுவான் என்று முதலை சொல்ல முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரித்து உன் வாலை கொண்டு அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை நீ வீழ்த்திவிடமுடியும் உன்னால் என்று கூறியதும், தன்னை உயர்த்தி பேசியவுடன் கர்வம் கொண்டு காலை விட்டுவிட்டு, இதுதான் உலகம் என பேசத் துவங்கியது முதலை.


முயல் மகனைப் பார்த்து உடனே ‘நிற்காதே! ஓடிவிடு’ என்றது. அப்போ கிடைத்த விடுதலையால் என் மகன் அங்கிருந்து ஓடிவிடுகிறான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போய்விடுகிறது, வலையில் சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் அவனைப் பிடித்தது நினைவுக்கு வருகிறது. கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்கிறது முயல்.


தப்பி வந்த என் மகன் வீட்டின் பக்கத்தில் இருக்கும் பலரிடம் அந்த முதலையை பற்றி கூறி அது தனது காலை பிடித்ததையும் சொல்லி அழைத்துவர, அவர்கள் எல்லோரையும் முதலையை அடித்துக் கொன்றுவிடுகின்றனர்.


என் மகனோடு வந்த வளர்ப்பு நாய், முயலைப் பார்த்து பாய்ந்து பிடிக்கிறது. மகன் அதைக் காப்பாற்றுவதற்குள் அந்த முயலை நாய் கொன்றுவிடுகிறது. உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை; அவனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டிவிடுகிறான்.


இதிலிருந்து என் மகன் கற்ற பாடத்தை எங்களிடம் சுருக்கமாக கூறினான்

உதவி செய்தவர்களுக்கு துன்பம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும் என்னை குழப்பிவிட்டது அப்பா என அவன் கூற,


இதுதான் உலகமா?

இதுதான் வாழ்க்கையா?

என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை


முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!.


அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம்.


வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எது என்றாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை


"வாழ்க்கையை புரிந்துகொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை) எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை".


படித்ததில் பிடித்தது...

Comments


Tags

Quik Links

Subscribe 

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page