புத்தக கூச்சல்கள்
- RithuPedia
- Mar 8
- 2 min read

என் வீட்டுக்கு வரும் பத்துப் பேரில் குறைந்தது ஒன்பது பேர் என் நூலகத்தைப் பார்த்ததும் கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? “ஆ, என்னால் நம்பவே முடியவில்லை. இவ்வளவு புத்தகங்களை நான் நூலகத்தில்தான் பார்த்திருக்கிறேன். உம்பர்தோ எக்கோ, இவற்றில் எத்தனை புத்தகங்களை நீங்கள் படித்து முடித்திருக்கிறீர்கள்?” சொல்லி வைத்ததுபோல் எல்லாரும் இந்தக் கேள்வியை ஏன் கேட்கிறார்கள் என்பதை இன்றுவரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
நீங்கள் இப்போது என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கலாம். சமீபத்தில் படித்ததில் உங்களுக்குப் பிடித்த நாவல் எது என்று கேட்கலாம். இத்தாலியைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள ஆசை, என்னென்ன புத்தகங்கள் படிக்கலாம் எக்கோ என்று கேட்கலாம். இதைப் படித்துவிட்டுத் தரலாமா என்றுகூடக் கேட்கலாம். எத்தனை புத்தகங்களைப் படித்தேன் என்று எப்படிச் சொல்ல முடியும்?
அங்கிருந்து ஒரு புல், இங்கிருந்து ஓர் இலை, எங்கிருந்தோ ஒரு குச்சி என்று பறந்து, பறந்து சேர்த்துக் குருவி கூடு கட்டும் இல்லையா? அதுபோல் உலகின் எல்லா மூலைகளில் இருந்தும் தேடித் தேடி, பார்த்துப் பார்த்து வாங்கி நான் கட்டி வைத்திருக்கும் புத்தகக் கூடு இது. குறைந்தது 50 ஆயிரம் புத்தகங்களாவது வைத்திருப்பேன் என்று நினைக்கிறேன். அவற்றில் நான் படித்து முடித்த புத்தகம் ஒன்றுகூட இல்லை என்பதுதான் உண்மை. ஆனால், அதைச் சொன்னால் யாராவது நம்புவார்கள் என்றா நினைக்கிறீர்கள்? ஏன், நீங்களே நம்ப மாட்டீர்கள்.
இவ்வளவு தன்னடக்கம் எல்லாம் வேண்டாம் எக்கோ, உண்மையைச் சொல் என்பீர்கள். நான் பார்க்கும்போதெல்லாம் படித்துக்கொண்டிருக்கிறாய். ஒரு புத்தகத்தைக்கூட முடிக்கவில்லை என்றால் எப்படி நம்புவதாம் என்பீர்கள். ஒன்றுகூட முடிக்கவில்லை என்றால் பிறகு எதற்காக மேலும் மேலும் வாங்கி, இவ்வளவு குவித்து வைத்திருக்கிறாய் என்று எதிர்க்கேள்வியும் கேட்பீர்கள்.
உண்மையைச் சொல்லட்டுமா? என் நூலகத்தில் இருக்கும் நூல்களில் சிலவற்றை நான் முழுக்கப் படித்திருக்கிறேன். ஆனால், ஒன்றைக்கூட இதுவரை முடித்ததில்லை.
முதல் சொல்லில் உங்கள் பயணத்தைத் தொடங்கி இறுதிச் சொல்லை வந்து சேர்ந்துவிட்டீர்கள் என்றால் அந்தப் புத்தகத்தை நீங்கள் வாசித்துவிட்டீர்கள் என்று பொருள். ஆனால், அதை நீங்கள் இன்னமும் முடிக்கவில்லை. சிறிது காலத்துக்குப் பிறகு அதே புத்தகத்தைக் கையில் எடுத்து மீண்டும் படித்துப் பாருங்கள். உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த கதையாக இருந்தாலும் முதல் வாசிப்பில் கிடைக்காத வெளிச்சம் இப்போது கிடைக்கத் தொடங்கும். அப்போது புரியாமல் போன அல்லது பாதி மட்டும் புரிந்த சில விஷயங்கள் இப்போது முழுமையாகப் புரியத் தொடங்கும். கவனியுங்கள், கிடைக்கத் தொடங்கும், புரியத் தொடங்கும் என்றுதான் சொல்கிறேனே தவிர, கிடைத்துவிடும், புரிந்துவிடும் என்று நான் சொல்லவில்லை. ஒருபோதும் அப்படிச் சொல்லவும் மாட்டேன். காரணம், எந்தப் புத்தகமும் இவ்வளவுதான், இதற்குமேல் எதுவும் இல்லை என்று கையை விரிக்காது. படிக்கப் படிக்க விரிந்துகொண்டே போகும். நீங்கள் எடுக்க, எடுக்க ஆழமாகிக்கொண்டே போகும். போதும் என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லலாம். முடிந்தது என்று ஒருபோதும் அது சொல்லவே சொல்லாது.
முடிக்காத புத்தகங்கள் ஒருபக்கம் என்றால், இதுவரை படிக்காத புத்தகங்கள் இன்னொரு பக்கம். இரண்டாவதைத்தான் அதிகம் சேர்த்து வைத்திருக்கிறேன். எதற்கு? படிக்காத புத்தகங்களால் என்ன பலன்? ஏற்கெனவே இருப்பதையே படிக்கவில்லை எனும்போது எதற்காக நான் மேலும் மேலும் வாங்கிக் குவித்து வைத்திருக்கிறேன்? ரொட்டி வாங்க வெளியே போனால்கூடக் குறைந்தது இரண்டு புதிய புத்தகங்களை ஏன் வாங்கி வருகிறேன்? இது போதும் என்றோ இருப்பதை வாசித்துவிட்டுப் பிறகு வாங்கிக்கொள்வோம் என்றோ இன்று வாங்காவிட்டால் இந்தப் புத்தகம் மறைந்து போய்விடாது என்றோ வீட்டில் இதற்குமேல் இடமில்லை என்றோ இதுவரை ஒருமுறைகூட எனக்குத் தோன்றாதது ஏன்?
ஏனென்றால், படித்த புத்தகங்களைப் போலவே படிக்காத புத்தகங்களும் என் நண்பர்கள்தான். அவை செய்யும் சேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவை என்னோடு பேசும். என் வேலைகளை எல்லாம் கெடுக்கும். என்னோடு சண்டையிடும்.
‘எக்கோ, நீ நினைப்பதுபோல் நீ அப்படி ஒன்றும் பெரிய எழுத்தாளனோ பெரிய சிந்தனையாளனோ பெரிய வாசகனோ அல்ல. எனக்கு அது தெரியும், இது தெரியும் என்று நீயாகவே நினைத்துக்கொள்ளாதே. உனக்குத் தெரிந்ததைவிடத் தெரியாததே அதிகம். அதை நீ மறந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் இங்கே வரிசையாக உட்கார்ந்துகொண்டிருக்கிறோம். போதாது, இன்னும் படிக்க வேண்டும், இன்னும் கற்க வேண்டும் என்பதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் உனக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருப்பதுதான் எங்கள் வேலை. அதைச் செய்வதற்காகத்தான் காசு கொடுத்து எங்களை வாங்கி வந்து உன் அலமாரியில் சேர்த்து வைத்திருக்கிறாய் என்பதை நாங்கள் அறிவோம்.’
படிக்காத புத்தகங்கள் பொல்லாதவை. என்னைச் சாப்பிட விடாது. தொலைக்காட்சி பார்க்க விடாது. குளிக்க விடாது. நீ கண்ணை மூடிக்கொண்டு தூங்கினால், கனவில் வந்து குதிப்போம் என்று மிரட்டும். மிரட்டுவதோடு நின்றுவிடாமல் நிஜமாகவே கனவில் வந்து இப்போது என்ன தூக்கம் வேண்டிக் கிடக்கிறது, எழுந்து உட்கார்ந்து எங்களை எடுத்து மடியில் வைத்துக்கொள் என்று கூச்சலிடும். படித்த புத்தகங்களாவது அமைதியாக இருக்கின்றனவா என்றால், அவையும் இல்லை. சரியாகப் படி, மீண்டும் படி, இன்னொரு முறை படி, நான் மறைத்து வைத்திருக்கும் அனைத்தையும் கண்டுபிடி என்று அழைத்துக்கொண்டே இருக்கின்றன. இந்தக் கூச்சல்களுக்கு இடையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் என்னைப் பார்த்து எவ்வளவு புத்தகம் படித்திருக்கிறாய் என்று கேட்டால் நான் என்ன சொல்வது? என்னதான் செய்வது?!
- உம்பர்தோ எக்கோ
Comments