top of page

மாற்றம் தவிர்க்க முடியாதது



பெர்லின் நகரப் பூங்கா ஒன்றில் தனது பொம்மையை தொலைத்து விட்டு அழுது கொண்டிருந்த போதுதான் அவரைப் பார்த்தாள் அந்தச் சிறுமி.


20 வயது இருக்கலாம் அவருக்கு. "ஏன் அழுகிறாய்.?" என்று கேட்டுத் தெரிந்தவர், மற்றவர்களைப் போல தாண்டிச் செல்லாமல், "வா.. அந்த பொம்மையைத் தேடலாம்.!" என்று சிறுமியையும் கூட்டிக் கொண்டு தேடினார். தேடுவதற்குள் இருட்டிப் போய்விடவே, "நாளை வருகிறேன். நாளையும் நாம் இருவரும் சேர்ந்து தேடலாம்.!" என்று தேற்றி அந்தச் சிறுமியை அனுப்பி வைத்தார்.


அடுத்த நாள் திரும்பி வந்தபோது, அவர் பொம்மை எழுதியதாகக் கூறப்படும் ஒரு கடிதத்தை அந்தப் பெண்ணிடம் கொடுத்ததுடன் அவரே அதை வாசித்தும் காட்டினார். அந்தக் கடிதத்தில், "தயவுசெய்து அழாதே... நான் உலகைச் சுற்றிப் பார்க்க ஒரு பயணம் செல்கிறேன். சீக்கிரம் திரும்பி வந்துவிடுவேன். அதுவரை எனது அனுபவங்களைப் பற்றி உனக்கு தினசரி எழுதுகிறேன்" என்று அந்த பொம்மை எழுதியிருந்தது.


அடுத்த நாளில் இருந்து அவர் தினசரி பொம்மையின் இருந்து வந்த கடிதங்களைக் கொண்டு வந்து அவளுக்கு வாசித்துக் காட்ட ஆரம்பித்தார். ஒவ்வொன்றும் தொலைதூர நாடுகளின் கதைகள் மற்றும் பொம்மையின் அற்புதமான சாகசங்களால் நிரம்பியிருக்க... சிறுமி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள்.


இறுதியில், "எனது பயணங்கள் முடிந்தன. நாளை திரும்புகிறேன். நீண்ட பயணங்கள் என் உருவத்தை சற்று மாற்றியிருக்கலாம். ஆனாலும் அது நான்தான். என்னை ஏற்றுக்கொள்.!" என்று எழுதியிருந்தது.


சிறுமி மறுநாளுக்காக மகிழ்ச்சியுடன் பொம்மையின் வருகை எதிர்பார்த்து காத்திருந்தாள். மறுநாள் வந்த அவர் சிறுமியிடம் கேட்டு அறிந்த அடையாளங்களை ஒத்த ஒரு பொம்மையை வாங்கியிருந்தார். என்றாலும் அதையறியாத அந்தச் சிறுமி, வித்தியாசங்கள் தெரிந்தாலும் அவள் அந்த பொம்மையை அன்புடன் ஏற்று கட்டிக் கொண்டாள்.


வளர்ந்த பிறகு அவளுக்கு அந்த மனிதர் சொன்னது அனைத்தும் தன்னைத் தேற்ற சொன்ன பொய்கள் என்று அறிந்திருந்தாள். ஆனாலும், அழுது கொண்டிருந்த முகம் தெரியா ஒரு சிறுமியை மற்றவர்கள் போல கடந்து செல்லாமல், அவளைத் தேற்றுவதற்காக அவர் எடுத்துக் கொண்ட கருணை.. அவள் மனதில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒரு பெரும் அன்பை விதைத்திருந்தது. அவளும் யாரையும் ஊதாசீனம் செய்யாத, அடுத்தவர் மீது அக்கறை கொண்ட நல்ல ஒரு பெண்ணாக வளர ஆரம்பித்தாள்.


நாட்கள் செல்லச் செல்ல இந்த நிகழ்வுகள் எல்லாம் மறந்து போன ஒருநாளில், செய்தித் தாளில் வந்திருந்த அந்த இறப்புச் செய்தியைப் பார்த்த போதுதான், அன்று தன்னைத் தேற்றியவர் பிரபல எழுத்தாளர் ஃபிரான்ஸ் காஃப்கா என்று தெரிந்தது அவளுக்கு. ஓடிச் சென்று அந்த பொம்மையை எடுத்து கட்டிக்கொண்டாள்.


அப்போதுதான் அந்த பொம்மைக்குள் மறைந்திருந்த காஃப்காவின் இறுதிக் கடிதத்தைக் கண்டுபிடித்தாள். அதில், "பெண்ணே... நாம் விரும்பும் அனைத்தும் தொலைந்து போகலாம். திரும்பக் கிடைக்காமலேகூட போகலாம். ஆனால் நம்பு... அன்பு வேறொரு வடிவில் நம்மைத் தேடி நிச்சயம் வரும்.!" என்று எழுதியிருந்தது.


மாற்றம் தவிர்க்க முடியாதது. என்றாலும், அது எதிர்பாராத பரிசுகளையும் புதிய தொடக்கங்களையும் நமக்குக் கொண்டு வரும் என்பதை நம்பியவர் காஃப்கா. அதுதான் அந்தச் சிறுமிக்கு நடந்தது. நாம் விரும்புவதை சிலசமயம் இழந்தாலும் ஆச்சரியமான மற்றும் அர்த்தமுள்ள வழிகளில் அவை நமக்குத் திரும்பக் கிடைக்கும் என்பதை அறிந்து, வாழ்க்கை தரும் மாற்றங்களையும் ஏமாற்றங்களையும் நாமும் ஏற்கப் பழகுவோமாக.!

Comments


Tags

Quik Links

Subscribe 

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page